தோழர் ஜீவா நேர்மையின் இமயம்! புலிகளைப் போன்றவர்களை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்றவர் ஜீவா! வைகோ.

Category: Favorites, Speeches

Region: Tamil Nadu

Date: 
Thu, 10/09/2009

பொது உடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா 21.8.2009 அன்று நாகர்கோவில் பூதப்பாண்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதப்பாண்டிக் கிளை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பொன்னீலன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரை...

‘ஜீவாவின் பிறந்த நாள் விழா பூதப்பாண்டியில் நடைபெற இருக்கிறது; அதில் உரையாற்றுவதற்கு அழைக்கிறார்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தார்’ என்று என்னுடைய அருமைத்தம்பி பொறியாளர் இலக்குமணன் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்த மறுநிமிடத்தில், ‘கட்டாயம் நான் வருகிறேன், ஜீவாவைப் பற்றி உரையாற்ற ஆவலோடு இருக்கிறேன். எந்த நாளில் நிகழ்ச்சி? என்று கேட்டேன். ‘ஆகஸ்ட் திங்கள் 22 ஆம் நாள் இசைவு அளிப்பதற்கு வசதிப்படுமா? என்று கலை இலக்கியப் பெருமன்றத்தார் வேண்டுகோள் விடுக்கின்றனர்’ என்று இலக்குமணன் கூறினார்.

‘22 ஆம் தேதி தலைநகர் சென்னையில் நான் ஏற்கனவே இசைவு அளித்த நிகழ்ச்சிகள் எனக்கு இருக்கின்றன. ஆகவே, 22 ஆம் தேதி எனக்கு வர இயலாதே? 21 ஆம் தேதி அவர்கள் விழாவை நடத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டேன்.

அடுத்த ஓரிரு நிமிடத்தில் திரும்பவும் தொலைபேசியில் அழைத்தார். ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்பார்களே, அதைப்போல, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி என்பதைப்போல, ஜீவா பிறந்த நாளே ஆகஸ்ட் திங்கள் 21 ஆம் தேதிதான். ஆகவே, அந்தநாளில் நீங்கள் வருவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

103 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தப் பூதப்பாண்டியில் பட்டம் பிள்ளைக்கும் உமையம்மைக்கும் பிறந்த ஒரு பெருமகனுக்கு விழா எடுக்கின்றோம். தென்னாட்டில், குறிப்பாக நாஞ்சில் நாட்டில், பெயர்கள் அனைத்தும் அழகிய தமிழ்ப் பெயர்கள்தாம். அதங்கோட்டு ஆசானும், தொல்காப்பியனும் உலவிய மண் அல்லவா? ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்று பரந்து விரிந்து கிடந்த தமிழகம், கடலுக்குள் அமிழ்ந்துபோனதே, அந்த லெமூரியக் கண்டத்தின் மிச்சம் சொச்சமான பகுதிதானே இந்தக் குமரி மாவட்டம். ஆகவேதான், இங்கே ஒவ்வொரு பெயரிலும் தமிழ் மணக்கிறது.

‘பூதப்பாண்டி’ என்ற பெயர் எப்படி வந்தது? என்று, ‘ஊரும் பெயரும்’ எழுதிய சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை விளக்குகிறபோது, ‘பூதப்பாண்டியன் என்கின்ற மன்னனின் பெயரே, அந்த ஊருக்கும் பெயராக ஆயிற்று’ என்று குறிப்பிடுகிறார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். அவனது அருமைத்திருமகன் பசும்பொன் பாண்டியன்.அவனது பெயரால் அழகிய பாண்டியபுரம் என்ற ஊர் அமைந்தாலும், பூதப்பாண்டியன் என்கின்ற தந்தையின் பெயரால் இந்த ஊரை நிறுவினான் என்று வரலாறு சொல்கிறது.

புராணத்துக் கதைகள் வேறு ஒன்றைச் சொல்கின்றன. அது செவிவழி கர்ண பரம்பரையாக வருகின்ற கதை. ஏனென்றால், இந்தக் கதைகள் சில வேளைகளில் பகுத்தறிவுக்கு எட்டாததாக இருந்தாலும்கூட, அவையும் மக்களின் கலை இலக்கியங்களில் இடம்பெற்று விடுகின்றன. அந்தவகையில், ஒல்லையூர் தங்த பூதப்பாண்டியன் என்கிற மன்னன், பூதப்படைகளை எல்லாம் திரட்டிக்கொண்டு, இந்த மலையாள தேசத்துப் பெருமக்களோடு போர் புரிவதற்குச் சென்றான்.

கேரளத்தை, மலையாளத்தை உருவாக்கியவன் பரசுராமன். மழு ஏந்திய பரசுராமன். ஜனகனின் சபையில், தசரதன் மைந்தன் கையில் வில்லைத் தூக்கிய மாத்திரத்தில், ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’, நாணிலே கணையைப் பூட்டி வில்லை எடுத்த மாத்திரத்திலேயே ஒடிந்து விழுந்தது; ‘அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் இருவரும் மாறி மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்றெல்லாம் கம்பன் வர்ணித்ததைப் போல, ஜனகன் மகள் சீதையை, தசரதன் மைந்தன் ராமன் திருமணம் செய்துகொண்டு அயோத்தியை நோக்கி வருகிற பொழுது, சத்திரிய குலத்து மன்னர்களை எல்லாம் வெட்டிவீழ்த்திக் கொண்டு இருக்கிற மழு ஏந்திய பரசுராமன், ‘சொத்தை வில்லை வளைத்ததாகப் பெருமை பேசுகிற ராமா, என் வில்லுக்குப் பதில் சொல்’ என்று எதிர்த்ததாகவும், தோல்வியுற்றுக் கர்வ பங்கம் அடைந்ததாகவும் கூட கம்பனின் காவியத்தில் சொல்லப்படுவது உண்டு.

அந்த மழு ஏந்திய பரசுராமன், தான் உருவாக்கிய நாட்டில், பூதங்களின் துணையோடு பூதப்பாண்டிய மன்னன் பெருமாக்கள்மீது படை எடுத்தா வருகிறான்? என்று எதிர்த்துப் போர்புரிந்து, பூதகணங்களை விரட்டி அடித்து, ஒரு எல்லையுள் கொண்டுவந்து நிறுத்திய தாகவும், அப்படி நிறுத்தப்பட்ட இடம்தான் ‘பூதப்பாண்டி’ என்று பெயர்பெற்றதாகவும், தலபுராணக் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறது. இங்கே பூதலிங்க சுவாமிக்குக் கோவில் இருக்கிறது. அது பழமையான கோவில்.

இந்தத் தென்னாட்டில், தாமிரபரணி ஆற்றங்கரை மக்களும்கூட பூதத்தான் என்று பெயர் வைக்கிறார்கள். இன்றும்கூட திருநெல்வேலியில் ‘பூதத்தான்முக்கு’ என்று அழைக்கப்படுகிற இடம் ஒன்று இருக்கிறது. இங்கே, பூதலிங்க சுவாமிக்குக் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு அருகில் இருக்கிற செண்பக மரம், 800 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பு உடையது என்பதும், இந்த பூதப்பாண்டி ஊருக்கு இருக்கின்ற ஒரு பெருமை.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், பகை மன்னர்களைச் செருக்களத்தில் சந்திக்கச் செல்கிறபோது சூளுரைக் கிறான். சூளுரைப்பது, சபதம் ஏற்பது என்பது தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற வழக்கம். தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சூளுரைத்தான். சிறுவன் என்று தன்னை எள்ளி நகையாடிய பகை மன்னர்களை

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி ஒருங்ககப்படேன் ஆகில்
மாங்குடி மருதன் தலைவனாக
புலவர் பாடாது வரைக என் நிலவரை...........
‘புலவர்கள் என் நாட்டை விட்டு வெளியேறட்டும்’

என்று சபதம் ஏற்றானே, அதைப்போல இந்தப் பூதப் பாண்டியனும் ஒரு சபதம் ஏற்கிறான்.

அவன் சொல்கிறான்: தமிழர்களின் சிந்தனை எப்படி இருந்தது என்பதை, தமிழர்களின் மான மரபு, நாகரிகப் பண்பாடோடு வாழ்ந்த ஜீவாவின் பிறந்த நாள் விழாவில் பேசுவது என்னுடைய கடமை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்,தமிழர்களின் சிந்தனை ஓட்டம் அப்படி இருந்தது.

‘யுத்தகளத்தில் பகைவர்களை வீழ்த்துவேன். அப்படி வீழ்த்தாவிடில், வெற்றி பெற்றுத் திரும்பாவிடில், பகை முகத்தில் வாகைக்கொடியை நான் உயர்த்தாவிட்டால், வெற்றி பெறாவிட்டால் என் பெருந்தேவி, என் உயிரனைய மனைவி என்னைப் பிரியட்டும்’ என்கிறான்.

தமிழர்கள் நட்பைப் பெரிதாகப் போற்றினார்கள். கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் நட்பைப்பற்றி, பொன்னீலன் போன்ற தமிழ் அறிஞர்கள் அறிந்து இருப்பார்கள். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சொல்கிறார். நான் யுத்த களத்தில் வெற்றிபெறா விட்டால், என் நண்பர்களை நான் இழப்பேன்.

மாவனும் ஆந்தையும்,
அந்துவந் சாத்தனும்
ஆதனழிசியும் இயக்கனும்
ஆகிய என் நண்பர்களின் கண்களில் இருந்து மின்னல் வெட்டுகின்ற அந்தச் சிரிப்பை நான் இழப்பேனாக’

என்கிறார்.

அறமன்றத்தில், நீதிமன்றத்தில் அறநெறி தவறாது நீதியை நிலைநாட்டியவர்கள் தமிழர்கள். அதனால்தான் மனுநீதிச்சோழன் கதையைக் காவியம் பேசுகிறது.

பூதப்பாண்டியன் சொல்கிறான்:

நீதிமன்றத்தில் கொடியவர்களைக் கொண்டு வந்து அமரவைத்து, முறைகளைப் பாழாக்கி, ஒரு கொடுங்கோல் முறைக்கு ஆளாகட்டும் நான். நான் தோற்றுப்போனால், என் மனைவியை இழப்பேனாக; நண்பர்களை இழப்பேனாக; என் நாட்டின் நீதிமன்றம் கெட்டுப் போவதாக; அறம் அல்லாதவர்களைக் கொண்டுவந்து பதவியில் அமர்த்துவேனாக; எல்லாவற்றையும்விட,
‘மண்பதை காக்கும் தென்புலம் காவல்’ என்று சொன்னானே அந்த தென்னவன் குலத்தில் நான் இனி பிறக்காமல், வன்புலம் காவல் செய்யும் கொடிய குடியில் நான் பிறப்பேனாக’

என்று கூறியதாக புறநானூறு சொல்கிறது.

மடிந்தான் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். அதற்குப் பிறகு அவனுடைய மனைவி நெருப்பை வளர்த்து அதில் குதிக்கச் செல்கிறாள். புலவர் பெருமக்கள், சான்றோர் பெருமக்கள், அமைச்சர்கள் அனைவரும் வந்து, ‘அரசி அரசன் இல்லாத நாடு இது. நீங்களும் தீக்குளித்து இறந்துவிட்டால், இந்த நாடு அனாதை ஆகிவிடும். நீங்கள் தீக்குளிக்காதீர்கள்’ என்கிறார்கள்.
‘என் கணவன் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை; இந்த நெருப்பில் குதிப்பேன் இந்த நெருப்பு எனக்குக் குளிர்ச்சிதரும் பொய்கையைப்’ போன்றது என்கிறாள்.

வள்ளிதழ் அவிழ்த்த தாமரை
நள்ளிறும் பொய்கையும் நீரும் ஓரற்றே

நெருப்பும் தண்ணீரும் எனக்கு ஒன்றுதான் என்கிறாள்.

அப்படித்தானே, நெருப்பும் தண்ணீரும் ஒன்றுதானே என்று முத்துக்குமார் ஈழத்து மக்களுக்காகத் தீக்குளித் தான். ஈழத்தமிழர்களைக் காப்பதற்காகத் தீக்குளித்தான். 14 பேர் தீக்குளித்தார்கள்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்ததைத் தாங்கிக் கொள்ளாமல், அவன் மனைவி நெருப்பை வளர்த்துச் சுற்றுகிறாள். ‘இப்பொழுது நெருப்பில் குதிப்பேன் தீயில் பாய்வேன்’ என்றாள்.
‘வேண்டாம் வேண்டாம்’ என்று அனைவரும் தடுக்கின்ற போது சொல்கிறாள்: ‘நல்ல குளிர்ச்சியான தண்ணீர் நிறைந்து இருக்கின்ற குளத்தில் தண்ணீரில் மூழ்குவதைப் போலத்தான் இந்த நெருப்பில் நான் மூழ்குவது’ என்று அவள் குதித்து மறைந்தாள்.

இந்த வரலாற்றுச் சிறப்பைச் சொல்வதற்குக் காரணம், ‘பூதப்பாண்டி’ என்கின்ற பெயரை உச்சரிக்கிறபோது, இந்த மண்தான், தமிழுக்குத் தொண்டு செய்கின்ற, மனித குலத்துக்குத் தொண்டுசெய்கிற ஒரு மாமனிதனை, மனிதநேய சிகரத்தைத் தந்தது, அந்த மாமனிதன் பெயர்தான் ஜீவானந்தம்.

பட்டம் பிள்ளைக்கும், உமையம்மைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகள் இறந்து போயின. தமிழ்நாட்டில் ஒரு வழக்கம். மூக்கைக் குத்தி மூக்குத்தி போடுகிற வழக்கம். இது ஒரு சடங்கு. இவர்களுக்கு நான்காவது பிள்ளை. ஆகவே ‘மூக்காண்டி’ என்று பெயர் சூட்டினார்கள். இவர்களுக்குக் குலதெய்வம், சொரிமுத்தம்மன். ஆக, குலதெய்வம் பெயரையும் சேர்த்து, ‘சொரிமுத்து’ என்றும் பெயர் வைத்தார்கள்.

சொரிமுத்து என்றும், மூக்காண்டி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மாமனிதன்தான், சிறு வயதில் தமிழ் மேல் கொண்ட காதலால், ‘உயிர் அன்பன்’ என்றும், ‘உயிர் இன்பன்’ என்றும் பெயர்களைச் சூடிக்கொண்டார். அவர்தான் பின்னர், ‘ஜீவானந்தம்’ ஆகிறார்.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பார்கள். சிறு வயதில் அவரது உணர்வைப் பாருங்கள். நாட்டின் விடுதலைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிள்ளையாகவே இங்கே உலவினார்.

ஐந்தாவது படிவம் படிக்கிறார். தாய் உமையம்மை இறந்து விட்டார். கொள்ளி வைப்பதற்கு பிள்ளையை அழைத்து வருகிறார்கள். எந்தப் பிள்ளையை? ஐந்தாவது படிவம் படித்துக் கொண்டு இருக்கிற ஜீவானந்தத்தை. கொள்ளி வைப்பதற்கு தண்ணீர்க்குடம் சுமந்து மூன்று முறை சுற்றிவந்து, சிதையில் அடுக்கப்பட்டு இருக்கின்ற விறகு இருக்கிறது அல்லவா, அதற்குமேல் வைக்கப்பட்டு இருக்கின்ற அன்னையின் உடலுக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆனால், அந்தப்பிள்ளை கொள்ளி வைக்க மறுக்கிறான்.

ஏன்? ஒரு வழக்கம். கொள்ளி வைக்கின்ற பிள்ளைக்குப் புத்தாடை சூட்டுவது வழக்கம். ‘கதராடை கட்டினால் தான் நான் இந்தப் பணியில் ஈடுபடுவேன்’ என்கிறார். கதர் ஆடை பூதப்பாண்டியில் இல்லை-நாகர்கோவிலில் இல்லை - திருநெல்வேலிக்கு ஆள் அனுப்பிப் பார்த்தார்கள், கதர் ஆடை வந்து சேரவில்லை. எனவே, கொள்ளி வைக்க மறுத்தான். சின்னஞ்சிறு பருவத்தில், தாயை உயிருக்கும் மேலாகப் பூசித்தவர்தான், நேசிப்பவர் தான். ஆயினும் அவர் பிறந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய அந்த உணர்ச்சிதான் அவரைத் தூண்டியது.

எனவேதான், விடுதலைக்குப் போராடிய தொடக்கக் காலத்து காங்கிரஸ் இயக்கத்தில் அவர் பணியாற்றினார். தெற்குச் சீமையில் இருந்து ஒரு பிரதிநிதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். வத்தலக்குண்டில் ஒரு மாநாடு. தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். ராஜாஜியும் வந்து இருக்கிறார். சின்னஞ்சிறு வாலிபர் ஜீவா, கனல் தெறிக்க அற்புதமாகப் பேசுகிறார். Who is that Jeevanantham? யார் இந்த ஜீவானந்தம்? என்று ராஜாஜி கேட்கிறார்.

அதற்குப்பிறகு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தமிழ் நாட்டின் பிரதிநிதியாக திரிபுரா மாநாட்டுக்குச் செல்கிறார். காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தோழர் ராமமூர்த்தி, அருமைத் தோழர் ஜீவானந்தம் எல்லோரும் சேர்ந்து திரிபுரா செல்கிறார்கள். அங்கே தலைவர் தேர்தல். பட்டாபி சீதாராமையாவா? நேதாஜியா? என்ற கேள்வி வருகிறபோது, நேதாஜி பக்கத்தில் நின்றவர்கள் வரிசையில் இருந்தவர்தான் ஜீவானந்தம் அவர்கள்.

சேரன்மாதேவியில், வ.வே.சு. ஐயர் நடத்திய குரு குலத்தில், ஆசிரியராக ஜீவானந்தம் பணி ஆற்றுகிறார். அங்கிருந்துதான் காரைக்குடி சிராவயலுக்குப் போகிறார். சிறாவயலில் குருகுலத்தில் பணி ஆற்றுகிறார். அங்கிருந்து நாச்சியார் கோவிலுக்கும், கோட்டையூருக்கும் செல்கிறார்.

1927 ஆம் ஆண்டு. ஏறத்தாழ 21 ஆவது வயது. அங்கேதான் காந்தியாரைச் சந்திக் கிறார். காந்தியார் ஜீவானந்தத்திடம் பேசுகிறபோது, ‘என்ன சொத்து? என்று கேட்கிறார். ‘இந்தத் தாய்நாடுதான் என்னுடைய சொத்து’ என்றார் ஜீவா. அதற்குக் காந்தி, ‘இல்லையில்லை; உன்னைப் போன்றவர்கள்தான் இந்த நாட்டுக்குச் சொத்து’ என்றார்.

அப்படிப்பட்ட தலைவன் பிறந்த மண்ணிலே, அவரது பிறந்த நாள் விழாவில் பேசுவதைக் கடமையாகக் கருதிப் பேசுகிறேன். ‘பூதப்பாண்டி’ என்கிற இந்த ஊருக்குப் பெருமையும், புகழும் தேடித்தந்த மாமனிதன் ஜீவா. தன் வாழ்நாள் முழுமையும் தன்னலம் அற்று, இலட்சியத்துக்காகவே வாழ்ந்து மனிதநேயத்தின் சிகரமாக வாழ்ந்து, மண்ணின் விடுதலைக்கு, மொழியின் விடுதலைக்கு, இனத்தின் விடுதலைக்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு, சமூக நீதிக்குப் பாடுபட்ட உணர்வு காரணமாகத்தான் தந்தை பெரியாரை இவர் கவர்ந்தார். தந்தை பெரியார் இவரைக் கவர்ந்தார்.

1926 இல், சிறாவயலில் தந்தை பெரியாரைச் சந்தித்தார் ஜீவா. அந்தக் காலகட்டத்தில் தான், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி.யும் சிறாவயல் வருகிறார். வாஞ்சிக்கு உணர்ச்சி ஊட்டிய, கப்பல் ஓட்டிய தமிழன் சிறாவயல் வருகிறார். ‘ராட்டை நூற்பதையும் தக்களி நூற்பதையும் பார்த்துவிட்டு, ‘வாள் ஏந்த வேண்டிய கைகள் நூல் ஏந்துவதா?’ என்று வ.உ.சி. கேட்டபோது, அது வாள் ஏந்துவதற்கு மறுத்துவிடுகின்ற மாற்று அல்ல. இதுவும் வீர உணர்ச்சிதான்’ என்கிறார் ஜீவா.

அன்று மாலை பொதுக்கூட்டம். ஜீவாவின் முழக்கத்தைக் கேட்கிறார். ‘அஞ்சுகின்றவர்களும் கெஞ்சுகின்றவர்களும் நாட்டுக்கு விடுதலையைத் தேடித்தர முடியாது. ஆனால், எதற்கும் அஞ்சாத சிங்கமாகிய இந்த ஜீவானந்தம் போன்றவர்களால்தான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று, செக்கு இழுத்த வீரசிதம்பரம் சிறாவயலில் முழங்கி விட்டுச் சென்றார்.
அப்படிப்பட்ட தொடக்ககால வாழ்வில், சமதர்ம உணர்ச்சி இருந்தது. சாதிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு சிறிய செய்திதான். அவருடைய தம்பி நடராசன். குருகுலத்தில் இன்னொரு இளைஞனை, சாதியைக் குறித்து இழித்துப் பேசிவிடுகிறான். அதை அறிந்த மாத்திரத்தில் ஜீவா, அனல்கக்கும் விழிகளோடு வெகுண்டு, அங்கே இருந்த புளியமரத்தில் ஒரு விளாறைப் பிடுங்கி, இரண்டு விளார்கள் ஒடிகிற அளவுக்கு அவரது தம்பியை அடிக்கிறார்.

ஏ.கே.செட்டியார் ஓடிவந்து தடுக்கின்ற போது, ‘ஆண்டான் அடிமை என்ற உணர்ச்சிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட வேண்டிய இந்தக் குருகுலத்தில், பாசறையில், இப்படிப்பட்ட உணர்ச்சி இவனுக்கு இருக்கலாமா? என்று கேட்கிறார். அப்படிப்பட்ட உணர்வுகள்தான், தந்தை பெரியாரிடம் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. சுயமரியாதைக் கருத்துகள் அவரது உள்ளத்தில் படர்ந்தன.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியாரோடு ஜீவா பங்கு ஏற்றார். 1930 ஆம் ஆண்டு, விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஜீவா பங்கு ஏற்றார். 1934 ஆம் ஆண்டு, தூக்குமேடைக்குப் போகின்ற நேரத்திலும், ‘இன்குலாப் ஜிந்தாபாத்-புரட்சி ஓங்குக’ என்று முழங்கி, இந்த நாட்டின் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றானே பகத்சிங், அவன் எழுதிய, ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார் ஜீவா. தந்தை பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக, அவர் மீது வழக்குப் போடப்பட்டது.

இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

ஜீவா, ஒரு சிறந்த கவிஞர். அவரது கவிதையைச் சொல்லித்தான் நான் இங்கே பேச்சைத் தொடங்கினேன். ‘சுயமரியாதைச் சொன்மாலை’ என்று அவர் முதன்முதலாக ஒரு குறுநூலை வெளியிடுகிறார். அது அவரது ஆத்திசூடி. ‘தூக்கு மேடையிலும் ஊக்கம் கைவிடேல்’ என்ற உணர்ச்சி முழக்கம்கொண்ட சுயமரியாதைச் சொன்மாலையை அவர்தந்தார். ‘உண்மை விளக்க நிலையம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். 1932 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது, ‘பெண் உரிமைக் கீதங்கள்’ என்று இருபத்திரண்டு பாடல்கள் அற்புதமான பாடல்கள் ஜீவா எழுதினார்.

புரட்சி பற்றி ஜீவா

புரட்சி என்பது புதுமைக் கூத்து
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்
புரட்சி என்பது போரிற் பெரிது
புரட்சி என்பது புதுமைக் கீதம்
புரட்சி என்பது புத்துயிர் முரசு
புரட்சி என்பது பொறுமைக்குறுதி
புரட்சி என்பது போம்பணிக்கறுதி
புரட்சி என்பது பூகம்ப வேகம்
புரட்சி என்பது பூரணமாற்றம்
புரட்சி என்பது புரட்டின் வைரி
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு

கலை இலக்கியப் பெருமன்றத்தாருக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

1961 ஆம் ஆண்டு கலை இலக்கிய பெரு மன்றத்தை ஜீவா நிறுவினார். பொது உடைமை இயக்கத்தில், இந்த மண்ணில் வளர்ந்த கலைகள், இந்த மண்ணுக்கு உரிய மொழி, கலை, இலக்கியம் இதனுடைய தாக்கம் இருக்க வேண்டும் என்ற வகையில், கார்க்கியைப் போற்றிய நாடுதானே ருஷ்யா? இலக்கிய வாதிகளைப் போற்றுவதுதானே பொது உடைமைக்கும் ஏற்றது? மாவோ ஒரு தலைசிறந்த கவிஞன் அல்லவா?

நூறு மலர்கள் பூக்கட்டும்; எண்ணற்ற சிந்தனைகள் முகிழ்க்கட்டும்
என்று கூறிய மாவோ, ஒரு அற்புதமான கவிஞன்.

அதைப்போல, கலை இலக்கியப் பெரு மன்றத்தை, ஒரு தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கினார் ஜீவா.

இங்கே பேசுவதற்கு, அடியேனுக்கு ஒரு தகுதி உண்டு. கலை இலக்கியப் பெரு மன்றம் 1961 இல் தொடங்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு, குறுக்குச் சாலையில், மூன்று நாள்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாநாடு நடைபெற்ற பொழுது, நான் சவேரியார் கல்லூரியின் மாணவனாக, என் அருமைத் தோழர் இளசை அருணாவின் ஏற்பாட்டின்பேரில், குறுக்குச்சாலை மாநாட்டுக்குச் சென்று பேசினேன்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் வந்து இருந்தார். குமரி அனந்தன் வந்து இருந்தார். தஞ்சை ராமமூர்த்தி வந்து இருந்தார். ‘வீரத்தில் சிறந்தவன் இலக்குவனா? இந்திரஜித்தனா?’ என்ற பட்டிமன்றத்தில், ‘இந்திரஜித்தன்’ என்ற அணியில் நான் பேசினேன்.

அதற்கு அடுத்த ஆண்டு, சோஷலிச சமுதாயத்தில் தனிமனித சுதந்திரம் உண்டா? இல்லையா? என்ற பட்டிமன்றம், அடிகளார் தலைமையில் அவர் நடுவர்ஏற்க, தொ.மு.சி.ரகுநாதன் ஒருபக்கத்தில், பாலதண்டாயுதம் இன்னொரு பக்கத்தில். நான் ஒரு அணியில் நின்று பேசினேன். 1962, 1963, 1964, 1965 என தொடர்ந்து நான்கு ஆண்டுகள், குறுக்குச்சாலை கலை இலக்கியப் பெருமன்றத்தார் நடத்திய மாநாட்டில் பங்கு ஏற்றவன் என்ற தகுதியோடு, ஜீவா விழாவில் இன்றைக்கு நான் இங்கே பூதப்பாண்டியில் பேசுகிறேன்.

நான் முதன்முதலாக ஜீவாவை எப்பொழுது பார்த்தேன்?

இதோ அமர்ந்து இருக்கிறார்களே சின்னஞ்சிறு பிள்ளைகள், அவர்களைப் போல, 12 வயதில் நான் கிராமத்துப் பள்ளி மாணவன். என் ஆசிரியர்கள் மிகுந்த இலக்கிய உணர்வு மிக்கவர்கள். என்னை ஒரு பேச்சாளனாக வார்ப்பித்தவர்கள். அவர்கள் எட்டயுரத்து பாரதி விழாவுக்கு எங்கள்பள்ளியில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்கள்.

எட்டயபுரத்தில் மாரியப்ப நாடார் பள்ளிக்கூடம் இன்றைக்கும் இருக்கிறது. அங்குதான் எங்களை அழைத்துச்சென்று, இரண்டு நாள்கள் தங்க வைத்தார்கள். இரண்டு நாட்கள் விழா. மாநாட்டுப் பந்தல் பெரிய பந்தல். சின்னப் பிள்ளைகள் நாங்கள்.

அங்கே ஒருவர் பேசினார். எனக்கு அந்தப் பேச்சுகளின் கருத்துகள் நினைவில் இலை. ஆனால், ஒரு ருத்ர தாண்டவத்தை நான் அந்த மேடையில் பார்த்தேன். ஒரு கரம் உயர்கிறது. இன்னொரு கரம் உயர்கிறது. இப்படித் தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பானோ? என்கிற அளவுக்கு அந்தக் கண்கள் கோவைப் பழம் போலச் சிவக்கின்றன. இடி இடிப்பதைப்போல கர்ஜனை எழுகிறது. மேடையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம்வரை சென்று பேசி வருகிறார். ஒலிபெருக்கியை விட்டுச் சென்று பேசுகிறார். ஆனால், குரல் முழக்கம் நெடுந் தொலைவுக்குக் கேட்கிறது.

நான் எனது பள்ளி ஆசிரியரிடம் கேட்டேன். ‘பேச்சே பயமாக இருக்கிறதே, இவர் யார்?’ என்றேன். ‘அவர்தான் ஜீவானந்தம்’ என்று சொன்னார். அதற்குப்பிறகு, அவரைச் சந்தித்துப் பழகுகின்ற வாய்ப்பெல்லாம் என் வாழ்நாளில் கிடைத்தது இல்லை. தொலைவில் இருந்து அறிந்ததும் படித்ததும்தான்.

ஆனால், சின்ன வயதில் எட்டயபுரம் பாரதி விழாவில் அந்த மேடையில் அவர் பேசிய அந்தக் காட்சிதான் என் கண்ணுக்குத் தெரிகிறது. அவரது கைகளை உயர்த்து வதும், ஒருபக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் போவதுமென மேடை முழுக்க அவர் உணர்ச்சி யோடு கலந்து விடுகிறார். அவருடைய எண்ணங்களோடு ஒன்றிக் கலந்து விடுகிறார்.

ஒரு பேச்சு, ஒரு உரை மக்களின் இதயத்தை எப்பொழுது ஈர்க்கும் என்றால்,பேச்சு என்பது சத்தியமாக இருக்க வேண்டும். நெஞ்சில் இருந்து வர வேண்டும். உள்ளத்தில் உண்மை இருந்தால் வாக்கிலும் உண்மை இருக்கும். அந்த உணர்ச்சி, அவரது அடிநாதத்தில் இருந்து வருகிறது. இருதய கபாடத்தில் இருந்து வருகிறது. ஊனோடு உயிரோடு கலந்து இருக்கிற உணர்ச்சி அவருடைய நாவினில் நடனமாடுகிறது. இடியின் முழக்கமாகக் கேட்கிறது. மின்னலின் வீச்சாகக் காட்சி அளிக்கிறது. பிரளயம் போல் எழுகிறது.

அந்தப் பேச்சுக்குச் சொந்தக்காரன் படைப்பாளி ஜீவா என்பதனால், அந்த ஜீவாவின் பிறந்த நாள் விழாவில் அவர் பிறந்த மண்ணில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டுப் பேசுகின்ற இந்த நல்ல வாய்ப்பை இன்றைக்கு நான் பெற்று இருக்கிறேன்.

ஒரு மாமனிதனின் பெருமையை, அவருடைய சிந்தனை ஆற்றல், அவருடைய இலக்கியப் புலமையை, அந்த ஊரிலேயே பேசுவது சிறப்பு.

1935 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் கருத்து வேறுபாடுகொண்டு அவர் பெரியாரைவிட்டு விலகுகிறார், இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறார். ‘தமிழ்நாடு சமதர்மக் கட்சி’ என்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில், சோஷலிஸ்ட்டுகள் இருந்தார்கள். அந்த சோஷலிஸ்ட்கள்தாம், பின்னர் கம்யூனிஸ்டுகள் ஆனார்கள். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தார்கள். ஜீவா அதில் இருந்தார்.

ஒருகட்டத்தில், கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற வேண்டும் என்று ஆச்சார்யா நரேந்திர தேவ் சொன்ன போது, நேருக்குநேர் ஆச்சார்யா நரேந்திர தேவிடம் வாதிட்டு வாயடைக்கச் செய்தவர் ஜீவா என்பதை அவரது வரலாற்றில் நான் படித்து இருக்கிறேன். அவர் கம்யூனிஸ்ட்தான். ஆனால், இந்த மண்ணின் உரிமையை எள் அளவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

இதோ அருகில் இருக்கின்ற மலையாள நாட்டில், ஏ.கே. கோபாலன் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர். மாபெரும் தலைவர். ‘தேவிகுளம், பீர்மேடு எங்களுக்கே சொந்தம்’ என்று அவர் குரல் கொடுத்தபோது, சம்மட்டி அடிப்பதைப்போல அதை மறுத்து, செவிட்டில் அடிப்பதைப்போலச் சொன்னவர் இந்த நாஞ்சில் மண் தந்த ஜீவா என்பதை இன்றைக்கு நான் பெருமையோடு கூறுகிறேன்.

‘எல்லை கமிஷன் வரையறுக்க வேண்டுமே தவிர, ஏ.கே.கோபாலன் அல்ல. ஏ.கே.கோபாலன் சொல்வது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து அல்ல. அவரது தனிப்பட்ட கருத்து’ என்று சொன்ன ஜீவாதான், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பகுதிகளை கேரளத்துக்குச் சொந்தம் என்று சொல்லப்பட்ட பகுதிகளை, ‘இல்லை இது எங்கள் தாய்த் தமிழகத்தின் அங்கம்’ என்று சொல்லி, அன்று போராடிய போராளிகளுள் ஒருவராகத்தான் ஜீவா இருந்தார்.

ஜீவா எத்தனை பணியாற்றி இருக்கிறார்? எவ்வளவு சிறப்பு செய்து இருக்கிறார்? அவருடைய வாழ்க்கையே போராட்ட வாழ்க்கை. வறுமை, அவர் தேடிக்கொண்டது. இல்லாமை, அவர் ஏற்றுக்கொண்டது. நான் இன்று இங்கு அரசியல் பேச மாட்டேன். நான் மேடைக்கு வந்தவுடன் சொல்லி விட்டேன். அரசியல் பேசுகிற இடம் இது அல்ல. மாமனிதனைப் பற்றிப் பேசுகிற இடம். நான் அவரைப் பற்றித்தான் பேசுவேன். அவர் புகழைப்பற்றித்தான் பேசுவேன்.

பொதுவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்றால், அவரைப்போல என் போன்றவன் வாழ்ந்துவிட முடியாது. ஆனால், அவரைப்போன்றவர்கள் காட்டிய பாதையை எண்ணிப் பார்த்து, ஒரு சத்தியவந்தனாக வாழ்ந்த ஜீவாவைப்போல, அவரைப்போல ஆகமுடியா விட்டாலும், அந்தப் பாதையில் செல்லவேண்டும் என்று நினைக்கிறவன் நான். ஜீவா அமைச்சராக இருந்தது இல்லை. ஆள்அம்பு எதுவும் இல்லை. சொத்துகளைக் குவிக்கவில்லை. ஆனால், கொள்கைக்காக இலட்சியத் துக்காக வாழ்ந்த மாமனிதர். ஆந்த ஜீவாவின் புகழ், இந்த மண் இருக்கின்றவரை இருக்கும். பூதப்பாண்டி என்ற ஊர் இருக்கின்றவரையிலும் இருக்கும்.

இலக்கியத்தில் அவருக்கு எவ்வளவு புலமை! அவர் எழுதிய எழுத்துகளை நான் புரட்டிப் பார்த்தேன். புறநானூறை, கலித்தொகையை, சங்க இலக்கியங்களை அவர் எடுத்துப் படைக்கின்ற ஆற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை. புறநானூறை எழுதுகிறார், புதிய கோணத்தில் அதற்கு விளக்கம் தருகிறார்.

‘தென்கடல் வளாகம் பொதுகையின்றி உண்பது நாழி உடுப்பது இரண்டே’ இதற்கு விளக்கம் தருகிறார்.

இங்கே மழை லேசாகப் பெய்து, கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கிறது. மழை வந்தால்தான் என்ன? மழையும் வாழ்த்துகிறது நமது ஜீவாவை என்று எண்ணி மகிழு வோம் என்றுதான் நான் வந்தேன். மாமழை போற்றுதும் மாமழைபோற்றுதும் என்போம் அல்லவா? அதற்கு ஜீவா சொல்கிறார். அவர் எழுதிய பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. அன்றிருந்த ஆட்சியாளர்களின் தலைவர்களது பெயர்களைச் சொல்லி, இவர்களிடம் கேட்டால், விலைவாசி கூடிவிட்டதே? விவசாயம் நாசமாகி விட்டதே? பயிர்கள் பாழாகி விட்டதே? மக்கள் வேதனையில் அமிழ்ந்து துடிக்கின்றார்களே?

இங்கே நமது விவசாய சங்கத் தலைவர், இன்றுள்ள உழவர் குடிமக்களின் கண்ணீரை நீங்கள் கொஞ்சம் பேசக்கூடாதா? என்று கேட்டார். நான் ஜீவாவைப்பற்றி மட்டும் பேசுகிறேன்’ என்று சொன்னேன். ஜீவா ஓர் இமயமான இலக்கியவாதி. ஜனசக்தி, சமதர்மம், அறிவு இதழ்களின் ஆசிரியர்.

ஜீவா சொல்கிறார். உழவர் பெருங்குடிமக்களின் துயரத்துக்கு, துன்பத்துக்கு விலைவாசி ஏற்றத்துக்கு இந்த அரசு இதனையெல்லாம் தடுப்பதற்கு முயல வில்லை என்று கேட்டால், ஆளும்துரைத்தனத்தார் சொல்கிறார்கள் மழை பெய்யவில்லை, நாங்கள் என்ன செய்ய முடியும்? என்கிறார்கள். மழை பெய்யவில்லை, அரசு என்ன செய்யமுடியும்? முதல்மந்திரி என்ன செய்ய முடியும்? இதற்கு நாங்களா பொறுப்பு? மக்கள் கஷ்டப்படத்தான் செய்வார்கள் என்று சொன்னதற்கு, ஜீவா எழுதுகிறார் தோழர்களே, என்ன அழகாக புறநானூற்றில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து சொல்கிறார்

மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும் கண்ணகன் ஞாலம்

மழை பெய்யாவிட்டால், வாவி குளங்கள் நிரம்பா விட்டால், இயற்கை பொய்த்து விட்டால், மழை பெய்யாமல் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்துவிட்டால், அரசனைத் தான் அந்த உலகம் பழிக்கும். அந்த மக்களைக் காக்கின்ற கடமை தவறியவன் என்று மன்னனைத்தான் பழிக்கும்’ என்று புறநானூற்றுப் புலவன் சொன்னான் என்று எழுதுகிறார் ஜனசக்தியில்.

என்ன அற்புதமான சிந்தனை!

பாரதியைப் பற்றிப் பலர் எழுதி இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கனல் கக்கும் முண்டாசுக் கவிஞனின் கவிதைகளோடு உயிரோட்டத் தோடு கலந்துவிட்டவர் ஜீவா. அவர் பாரதியைப் பற்றி எழுதியதும், பேசியதும் நிகரற்றது.

யாரை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் தெரியுமா ஜீவா?

புலிகளை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இங்கே சுருக்கு எழுத்தாளர்கள் வந்து இருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஒற்றர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டுப் போகிறபோது ஜீவாவின் பெருமைகளில் மனமெல்லாம் பூரித்துத்தான் போவார்கள். அவர்கள் நமது நண்பர்கள் தான். ஆனாலும் கடமை இருக்கிறது அல்லவா? வைகோ அல்லவா பேசுகிறான் பூதப்பாண்டியில்.

நேற்று சென்னையில் பேசியதற்கு இன்று என்மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மாலையில் செய்தி வந்தது. நேற்று அண்ணன் பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாசும், ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் தலைநகர் சென்னையில் உரையாற்றியதற்கு, எங்கள்மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மாலை ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியைச் செவியில் வாங்கி இதயத்தில் சுமந்துகொண்டுதான் நான் பூதப்பாண்டிக்கு வந்து இருக்கிறேன்.

பூதப்பாண்டியில் இவன் என்ன பேசப்போகிறான்? என்று பதிவு செய்கின்ற கடமையைச் செய்வதற்கு அவர்கள் வந்து இருக்கிறார்கள். பாருங்கள் பூதப்பாண்டியில்போய் விடுதலைப்புலிகளை மட்டுமே நீ நண்பனாக கொள்ள வேண்டும் என்று வைகோ பேசினான் என்று சொல்லலாம். நான் சொல்லவில்லை. ஜீவா சொல்கிறார், புலிகளைத் தான் நண்பர்களாக ஏற்றுக்கொள் என்று.

அவர் எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் இயற்றிய கவிதையை எழுதுகிறார். யாரை நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் தெரியுமா?
வரப்பு ஓரங்களில் சின்னஞ்சிறு வளைகளில் பதுங்கிக் கிடக்கின்றதே எலிகள், அவை பிறர் பொருளைக் களவாடுகின்றவை. பிறர் உழைப்பிலே சேமித்து வைத்து இருக்கின்ற தானியங்களைத் திருடிக் கொண்டுபோய், விளைந்த கதிர்களைத் திருடிக்கொண்டுபோய், புதுமணப் பெண் போலத் தலைசாய்ந்து நிற்கக்கூடிய நெற்கதிர்களைத் திருடிக்கொண்டு போய்த் தங்கள் வளையில் ஒளித்து வைத்துக் கொள்ளக்கூடிய திருட்டுக்குணம் படைத்த எலிகளை நீ நண்பனாகக் கொள்ளாதே.

அப்படியானால் யாரை நண்பனாகக் கொள்ள வேண்டும்?

அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்கு உள்ளே ஒரு குகை. அங்கே உறுமியவாறு வருகிறது ஒரு வேங்கைப்புலி. அது பசியோடு வருகிறது. வேட்டையாடுவதற்காக வருகிறது. வேங்கைப் புலி எங்கே செல்லும்? வேட்டைக்குச் செல்லும். ஒரு தாய் வீட்டு வாசலில் நிற்கிறாள். புலவன் ஒருவன் வருகிறான். தாயே உன் பிள்ளை எங்கே அம்மா? உன் புதல்வன் எங்கே அம்மா? என்று தாயிடம் புலவன் கேட்கிறான்.

சிற்றினத் தூண்பற்றி நின்மகன்
யாண்டுளன் என வினவுதியாயின்
யாண்டுளன் என அறியேன் ஆயினும்
புலி சோர்ந்து யோயிய கல்வளைபோல
ஈன்றவயிறே இதுவே தோன்றுவன் மாதோ
போர்க்களத்தானே

அவன் எங்கே சென்றான் என்று எனக்குத் தெரியாது. அந்தத் தாய் சொல்கிறாள்.

என் பிள்ளை எங்கே சென்றான் என்று தெரியாது. ஆனால், புலி எங்குபோகும்? வேட்டைக்குப் போகும். இந்தக் குகை என்று தன் வயிற்றைத் தொட்டுக் காண்பித்துக் கொண்டே சொல்லுகிறாள், அந்தப் புறநானூற்றுத்தாய். இந்தக் குகையில்தான் அந்தப் புலி கிடந்தது. புலி வேட்டைக்குப் போவதைப்போல என் பிள்ளை எங்காவது ஏதாவது யுத்தகளத்தில், வேலும் வாளும் உராய்கின்ற போர்க்களத்தில் போர் செய்து கொண்டு இருப்பான், அங்கே சென்று பார்’ என்கிறாள். இதைச் சொன்னவள் ஒரு புறநானூற்றுத் தாய்.

அதைப்போல, இந்தப் புலி பசியோடு வருகிறபோது எதிரே ஒரு காட்டுப் பன்றி வருகிறது. இந்த வேங்கைப்புலி அடித்து வீழ்த்துகிறது. சரியான பசி. சாப்பிட வேண்டும் அல்லவா? மேலும் கீழும் பார்க்கிறது. வலது பக்கம் இடது பக்கம் பார்க்கிறது. சாப்பிடவில்லை. போய் விடுகிறது. என்ன காரணம்? ஜீவாதான் சொல்கிறார். இந்தப் புலி காட்டுப்பன்றியை அடித்தபோது அந்தக் காட்டுப் பன்றி, வலது பக்கத்தில் விழாமல் இடது பக்கத்தில் விழுந்து விட்டது.

இடதுபக்கத்தில் விழுந்த ஒரு விலங்கைப் புசிப்பது தன் வீரத்துக்கு இழுக்கு என்று அந்தப் பசியோடும், பட்டினியோடும் மீண்டும் குகைக்குப் போய்விட்டது. மறுநாள் வரை காத்து இருக்கிறது. பொழுது விடிந்தது. காடு அதிர மீண்டும் முழங்கியது அந்தப் புலி. மதம்பிடித்த யானை எதிரே வருகிறது. யானையின்மீது பாய்கிறது இந்த வேங்கைப்புலி. மத்த கஜத்தைப் பிளக்கிறது அந்த யானையை வலது பக்கத்தில் வீழ்த்துகிறது. வலது பக்கத்தில் விழுந்த யானையை அது புசிக்கிறது.

அப்படிப்பட்ட புலிகளைப் போன்றவர்களை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ள வேண்டும் என்கிறார் ஜீவா.

அநேகமாக இதற்கு வழக்குப் போடுவது என்றால் ஜீவானந்தத்தின் மீதுதான் நீங்கள் வழக்குப் போடவேண்டும். ஒருவேளை ஜீவானந்தத்தையே அழைத்துக் கொண்டு வந்தாலும், ஜீவா அவர்கள் சொல்வார்கள். என்னைக் கைது செய்ய வேண்டாம்; சோழன் நல்லுருத்திரன் என்று ஒரு மன்னன் இருந்தான், அவனைக் கைது செய்யுங்கள்’ என்பார்.

இலக்கியத்தை எடுத்துச் சொல்கிறபோதுகூட அவருடைய உள்ளத்தில் எப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தன என்பதை நான் பார்க்கிறேன். இலக்கியவாதியினுடைய கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும்? அவர் சொல்கிறார். பொன்னீலன் அவர்களே, ஒரு வணிகனின் கண்ணோட்டம், ஒரு பொறியாளனின் கண்ணோட்டம், இப்படி ஒவ்வொருவரின் கண்ணோட்டம். ஒவ்வொன்றும் வேறுபட்டது.

அழகாகச் சொல்கிறார் ஜீவா. இன்றைக்கு வானத்தில் நிலவைப் பார்க்க முடியாது. நட்சத்திரங்களையும் பார்க்க முடியாது. கரிய மேகங்கள் கூடி இருக்கின்றன. கருமஞ்சுக்கூட்டம் சூழ்ந்து இருக்கிறது.

ஒரு பெளர்ணமி நாளில் நிலவைப் பார்க்கிறபோது வானநூல் ஆராய்ச்சியாளர்கள், கிரகங்கள் சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சுற்றுகிறது. சந்திரன் இவ்வளவு தொலைவில் இருக்கிற நிலப்பரப்பு’ என்றெல்லாம் அதைப்பற்றி ஆராய்ந்துகொண்டு இருப்பார்கள். ஆனால், தாய் தன் பிள்ளையிடம் அம்புலியைக் காட்டுகிறாள், கதை சொல்கிறாள். சின்னப்பிள்ளைகள் நிலவைப் பார்த்தவாறு சாதத்தைச் சாப்பிடுகின்றன.

நல்ல நிலாக்காலம்; நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு கவிஞன் சொல்லுகிறான்.

வெள்ளித் தட்டில் சோற்றைக் கொண்டு வந்து தாய் பிள்ளைக்குத் தருகிறாள். அந்தப் பிள்ளை காலால் அந்தத் தட்டை எட்டி உதைக்கிறான். வெள்ளித்தட்டு ஒருபக்கத்தில் விழுகிறது. பருக்கைகள் சிதறிக் கிடக்கின்றன. அந்த வெள்ளித்தட்டுதான் ஊர்ந்து வருகின்ற நிலவு. சிதறிய பருக்கைகள்தான் வானத்து நட்சத்திரங்கள்’

என்று வருணிக்கிறான்.

இன்னொரு கவிஞன் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்,

மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம்
நாளும் புண்மீதில் அன்புபாய்ச்சும் புலையர் செல்வராம்
இதைத்தன் கண்மீதில் பகலெல்லாம்
கண்டுகண்டு அந்திக்குப்பின் விண்மீனாய்க்
கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி

இது பாரதிதாசன்.

இந்த நாட்டில் நடைபெறும் கொடுமைகள், முதலாளிகளின் கொடுமைகள், செல்வந்தர்களின் கொடுமைகள், பணம் படைத்தோர் கொடுமைகள். உழைக்கின்றவன் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன், ஏழை எளியவன், இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைக்கிறவன், அவனுடைய நிலைமையைக் கண்டு கொதித்துப்போனதால், அவன் படும் துன்பத்தைக்கண்டு, அவரது உழைப்பை உறிஞ்சி, அவனை ஓடாகத் தேய்த்துவிட்ட அந்த உழைப்பை உறிஞ்சி உறிஞ்சிக் கொழுத்துப்போன முதலாளிகள் செழிக்கிறபோது, அந்தப் பாடுபடும் பாட்டாளி படுகின்ற துயரத்தைக் கண்டு ஏற்பட்ட வேதனை கொப்பளங்களாக வெடித்துவிட்டது வானத்தில்; அவைதான் அந்த விண்மீன்கள்; அவைதான் அந்த நட்சத்திரங்கள்.

என்ன அற்புதமான கற்பனை! என்ன அவனுடைய உணர்ச்சி! அவர்தான் பாவேந்தர் பாரதிதாசன்.

அதைப்போல ஜீவா எழுதுகிறார். ‘அம்புலியைக் காட்டியவாறு பிள்ளைக்கு அமுது ஊட்டுகிறாள். வானநூல் ஆராய்ச்சியாளனுக்கு அது ஒரு கோளாகத் தெரிகிறது. தாவர நூல் ஆராய்ச்சியாளன், செடிகொடிகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, மகரந்தம் எங்கே படருகிறது? வேர் எங்கே ஊன்றுகிறது? என்று ஆராய்ந்து கொண்டு இருப்பான்.
ஆனால், வோர்ட்ஸ்வொர்த் சொல்கிறான்: என் தாயின் கல்லறையில் படர்ந்து உள்ள செடிகொடிகளை, தாவரநூல் ஆராய்ச்சி செய்வதற்காக என் மனம் இடம் கொடுக்குமா? என்று கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் சொல்கிறான்.

அடுத்து பேசுகிறார்,
ஒரு உடற்கூறு வல்லார் குழந்தையை வர்ணிப்பது என்றால் என்ன சொல்ல வேண்டும்? குழந்தை என்பது என்ன? ‘ஒன்றரை அடி உயரம், 20அங்குலம் சுற்றளவு, பதின்மூன்று ராத்தல் எடை உள்ள ஒரு சதைப்பிண்டம்’ இதுதான் ஒரு உடம்பு என்று உடற்கூறு ஆராய்ச்சியாளன் கூறுவான்.

ஜீவா கூறுகிறார்,
பெற்ற தாய் எப்படி கூறுவாள்?
சீரங்கம் ஆடி திருப்பாற்கடலாடி
மாமாங்கம் ஆடி மாசிக் கடலாடி
தைப்பூசம் ஆடி தவம் செய்து பெற்ற கண்ணே!
என அன்பு சொரிந்து தாய் சொல்வாள்.

இப்படிக் குழந்தையைத் தாய் பார்ப்பதற்கும் உடற்கூறு வல்லுநர் பார்ப்பதற்கும் எப்படி இருக்கிறது? தாய்க்குப் பிள்ளை, அவள்தான் எல்லாம்.
ஜீவா கூறுவதைக் கேளுங்கள்.

சைக்கிள் வண்டியை ஒரு பொறிஞர் பார்த்தால், ஒரு சக்கரத்தின் பின் மற்றொரு சக்கரம் ஒழுங்காய்ச் சுழன்று செல்வதையும், அதன் அமைப்பையும் கண்டு ஆராயத் தொடங்குவார். ஆனால், கவிமணி அப்படியா செய்கிறார்? அல்ல, அவர்

“அக்காளும் தங்கையும்போல் அவைபோகும் அழகைப் பார்”

என்று அதைப்பார்த்துக் கொண்டே சொக்கி நின்று விடுகிறார்.

சாதாரண நிலையில் ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது அவள் மானிடப் பிறப்பின் சின்னமாகத் தோன்றுகிறாள். ஆனால், மனம் உணர்ச்சிவசப்பட்டுக் கிடக்கும்பொழுது அதேபெண்,

ஞானத் திருவடிவாய்
இன்ப மதுக்குடமாய்
கானமதுகரமாய்
கண்நிறைந்த பேரழகாய்
காட்சியளிக்கிறாள்.

எனவே, இலக்கியத்தின் உயிர் உணர்ச்சிதான்.

கலைஞன் ‘யான்’ ‘எனது’ என்ற அகங்காரத்தைக் கரைத்து, கலை உருவில் மயமாகி விடுகிறபொழுது, ஒரு துளி ஒரு கடலாகி விடுகிறது.
ஒரு பாரசீகப் புலவனின் உவமானத்தால் இதை விளக்கிக் கூற விரும்புகிறேன்.

ஒரு நாள் இரவில் சில வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றுகூடின, அவை விளக்கின் ஒளி பொருந்திய, சுவாலையோடு ஐக்கியமாகிவிட வேட்கை கொண்டன. ஆனால், தீக்கொழுந்தின் தன்மையை யாராவது சென்று பார்த்துவந்தால் நல்லது என்று முடிவு கட்டின. உடனே ஒரு வண்ணத்துப் பூச்சி, எதிர் வீட்டில் இருந்த விளக்கருகே சென்றுவிட்டுத் திரும்பி வந்தது. தான் கண்ட விளக்கின் ஒளியை அது விரித்துக் கூறத் தொடங்கிற்று. ஆனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளின் தலைவனான பூச்சி, ‘விளக்கின் சுவாலை பற்றிய உண்மையை ஞானத்தை அது பெறவில்லை’ என்று சொல்லிவிட்டது.

எனவே, மீண்டும் மற்றொரு பூச்சி சென்றது. அது விளக்குச் சுவாலையின் வெப்பம் தன்மீதுபடும் அளவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தது. அதனுடைய சுவாலையைப் பற்றிய விளக்கமும் திருப்தியற்றதாகவே இருந்தது.

ஆகவே, மூன்றாவதாக வேறொரு வண்ணத்துப் பூச்சி சென்றது. அது விளக்கின் சுடரின் உள்ளேயே நுழைந்துவிட்டது. அதனால் அதன் உடலும் எரிந்து நெருப்பாக ஆயிற்று. அந்தப் பூச்சியும் நெருப்பும் ஒன்றாயின.

இதைக் கண்டதும், தலைவனான வண்ணத்துப் பூச்சி கூறிற்று. “அந்த வண்ணத்துப் பூச்சிதான், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டது. தன் வாழ்வை அறவே கரைத்துவிடுகிற பொழுதுதான், லட்சியத்தை அடைய முடியும். ‘யான்’, ‘எனது’ என்று செருக்கை கரைக்கும் வரையில் அன்பின் தகுதியை நீ அறிய முடியாது”

பரீதுத்தீன் அத்தார் மேற்கூறிய உவமானத்தில் காட்டியுள்ளபடி, தன்னைக் கரைத்துக் காணும் காட்சி பெறாவரையில், இலட்சிய வாழ்வில் வெற்றிபெற முடியாது.

இந்தத் தியாக உணர்வுடன்தான் ஈழத்தமிழர்துயர்கண்டு நெஞ்சுவெடித்த தமிழர்கள் 14 பேர் தீக்குளித்தார்கள். உயிர்களாக கொடுத்தார்கள்.

நம் சொந்தத் தமிழ் ஈழ உறவுகள் மடிகிறபோது, பச்சிளங் குழந்தைகள் சாகிறபோது, அந்தக் கொடுமையைக் கண்டு மனம் கொதித்துப்போய், அதைத் தடுக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறபோது, நம் உயிரை இங்கே இந்த வேள்வியில் ஆகுதி செய்வோம் என்று தருகிறார்களே, ‘வண்ணத்துப் பூச்சியின் கதையைச் சொல்கின்ற ஜீவா, எந்த இலட்சியத்துக்காக வாழுகிறானோ அந்த இலட்சியத்துக்காக தன் உயிரையும் கொடுப்பதற்கு ஒருவன் தயாராக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

அப்படிப்பட்ட ஜீவா அவர்கள், 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு மாபெரும் தலைவர். சட்டமன்றத்தில் அவர் மிகச் சிறப்பாகப் பேசக்கூடியவர். சட்டமன்றத்தில் உரையாற்றுகின்ற நேரத்தில் ஒருநாள், சபையில் சுவாரஸ்யமான விவாதம். அப்பொழுது ராஜாஜி முதல் அமைச்சர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பேசுகிறபோது, அவர்கள் ஒவ்வொருவரும் இன்றைக்கு எங்கள் தொகுதியில், இப்பொழுது இருக்கிற நிலைமையில் 3 மருத்துவ மனைகள் திறக்க வேண்டும்; 15 நியாயவிலைக் கடைகள் திறக்க வேண்டும்; 10 கஞ்சித் தொட்டிகள் திறக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு எம்.எல்.ஏ. வருகிறார். இல்லை எங்கள் தொகுதியில் 4 மருத்துவமனை கட்டவேண்டும். 3 நியாய விலைக்கடைகள் வேண்டும் என்று வரிசையாகப் பேசுகிறார்கள்.

முதலமைச்சர் ராஜாஜி முகம்சுளிக்கிறார். அவர் சொல்கிறார்: இன்று விவாதத்தில் பேசிய ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றே பேசிக்கொண்டு இருந்தார்கள். இது வருந்தத்தக்க நிலைமை. தொகுதி கண்ணோட்டம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு பரந்து விரிந்த இந்த மாகாணத்தைப்பற்றிய கண்ணோட்டம் இல்லாமல்போயிற்றே’ என்று குறைபட்டுக் கொள்கிறார். எம்.எல்.ஏ.க்களுக்கு வருத்தம். அன்றைய சட்டசபைக்கூட்டம் முடிந்து விட்டது.

மறுநாள் கூட்டம் தொடர்கிறது. ஜீவா பேச எழுகிறார்.

‘நேற்றைக்கு மாட்சிமை தங்கிய நமது முதல் அமைச்சர் அவர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எல்லாம் தொகுதி கண்ணோட்டம்தான் இருக்கிறது, மாகாணத்தைப்பற்றிய கண்ணோட்டம் இல்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார். அவர் வருத்தப்படத்தான் செய்வார். ஏனென்றால், இங்கே பேசிய ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி இருக்கிறது. அந்தத் தொகுதியில் ஓட்டு வாங்கி வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக வந்து இருக்கிறார்கள்.

அவர்கள் அந்தத் தொகுதி மக்களுக்குக் கடமையாற்ற வேண்டிய பணிசெய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஆக, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்காகத்தான் பேசுவார்கள். ஆனால், பாவம் நமது முதலமைச்சருக்கு தொகுதியே கிடையாது. அவர் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற்று வரவில்லை. மக்களிடம் ஓட்டுவாங்கி வரவில்லை. பரிதாபத்துக்கு உரியவர். அவருக்கே தொகுதி இல்லை. அதனால் தொகுதி கண்ணோட்டத்தை நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது’ என்று சொன்னவுடன், சபையில் அனைவரும் கைதட்டியது மட்டுமல்ல. முதலமைச்சர் ராஜாஜியும் மேஜையைத் தட்டினாராம்.

இப்படி அவருடைய பேச்சு சாதுர்யம் என்பது, எதிராளியை மனம்நோகச் செய்யாமலேகூட வாழைப் பழத்தில் ஊசியைச் செலுத்துவது என்பதைப்போல, அதைச்சொல்லக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது. அப்படிப்பட்ட அனைத்துத் திறமைகளையும் பெற்று இருந்த ஜீவா அவர்களின் வாழ்க்கை முழுமையும் வறுமைதான்.

ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப்படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன். ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட்டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும். அப்படிப்பட்ட குடிசையில்தான் அவர் வாழ்ந்தார்.

அப்படி ஒருகட்டத்தில், அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப் பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில்தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான். ஆனால், ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை. வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார். அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான்.

விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது? என்கிறார்.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவானந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார். காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காமராசர்.

‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒருபார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டுவிட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல, காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காமராசர்.

அதைவிட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக் குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார். மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும். அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத்தைப் பார்க்கலாம். என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல்கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப்போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண்டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனுஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும்போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.

இப்படி வாழ்ந்த ஒரு மனிதன், நேர்மையின் நெருப்பாக வாழ்ந்த ஜீவா, இந்தப் பூதப்பாண்டி மண்ணில் பிறந்தவர்.

ஏழ்மை வறுமை இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், எதையும் தேடிக் கொள்ளாமல் வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையே போராட்ட வாழ்க்கைதான்.

1932 இல் சிறைக்குப் போய்விட்டு வந்து மீரட் சதி வழக்கில் இருந்த கம்யூனிஸ்ட் தோழர்களோடு பழகித்தான், பொதுவுடைமை இயக்கத்தின் தாக்கம் எனக்கு வந்தது’ என்கிறார். 1943 இல் விடுதலை பெற்று வந்ததற்குப்பிறகு தோழர் ராமமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார். நானும், இளங்கோவும் விடுதலை பெற்று வந்தோம். ஆனால், ஊரைவிட்டு வெளியிலும் போகக் கூடாது. பேசக்கூடாது, வாய்ப்பூட்டுச் சட்டம். இந்த பூதப் பாண்டியைவிட்டு எங்கேயும் போகக்கூடாது. அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகிற இளங்கோதான், என்னுடைய அருமைத்தம்பி இலக்குமணனின் தந்தை என்கிறபோது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!

அதுமட்டும் அல்ல. இலக்குமணனின் தந்தை இளங்கோவின் உண்மையான பெயர் கிருஷ்ணன் பிள்ளை. அவரைத்தான், இளங்கோ என்று ஜீவா அழைக்கிறார். அதைப்போலத்தான் நடராஜனை, மணிமொழி என்கிறார். நாகலட்சுமியை, கிளிமொழி என்கிறார். ராமசாமியை, தொல்காப்பியன் என்கிறார். இப்படி ஒவ்வொருவருக்கும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுகிறார்.

அப்படிப்பட்ட ஜீவா அவர்கள், சிறையில் எவ்வளவோ துன்பதுயரங்களை ஏற்றுக் கொண்டு, பொதுநல வாழ்வுக்காகவே இருந்தவர்.

1948 ஆம் ஆண்டில் பத்மாவதி என்கின்ற மாதரசியை மணந்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள், ஸ்டாலின் மணிக்குமார் தலைப்பிள்ளை. உஷா தேவி, உமா தேவி என இரண்டு பெண் பிள்ளைகள். இந்த ஸ்டாலின் மணிக்குமார் அவர்கள், நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

அருமைத் தோழர்களே, ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. 1963 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி ஏறத்தாழ பொங்கல் திருநாள் சமீபத்தில் கம்யூனிÞட் கட்சி கூட்டத்தில் பேசுகிறபோது, ‘சாவு என்னை நெருங்கி வந்தாலும் விரட்டி அடிப்பேன். நான் ஏற்றுக்கொண்டு இருக்கிற இலட்சியத்தை, ஏந்தி இருக்கிற செங்கொடியை, நான் சார்ந்து இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியை, வாகை சூடவைத்து விட்டுத்தான் நான் மடிவேன். சாவையும் விரட்டி அடிப்பேன்’ என்று ஜனவரி 14 ஆம் தேதி பேசுகிறார்.

அவரது மனைவி பத்மாவதி அம்மையார் அவர்கள் சமூகநலத்துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். அவரிடமிருந்து கடிதம் வருகிறது. மகள் பூப்படைந்துவிட்டாள். பூப்புனித நீராட்ட வேண்டும். 19 ஆம் தேதி ஏற்பாடு செய்து இருக்கிறோம். நீங்கள் வராமல் இருந்து விடாதீர்கள் என்று கடிதம் வருகிறது. மகிழ்ச்சியோடு நான் அந்த நிகழ்ச்சிக்குப் போகப்போகிறேன் என்று உணர்வோடு இருக்கிறார்.

இதற்கு நடுவே, 16 ஆம் தேதி நடந்துவந்து கொண்டு இருக்கும்போதே திடீரென்று மயக்கம் ஏற்படுகிறது. அப்படியே உட்காருகிறார். அவருடைய மகள் குமுதாவிடத்தில் தாம்பரத்தில் சொல்கிறார்: ‘நீ கவலைப்பட வேண்டாம். சென்னைக்குச் சென்றுவிடு, கோவிந்தனிடம் தகவல்சொல்லிவிடு. நான் கடையில் போய் இருந்து கொள்கிறேன்’ என்று கோவிந்தன் கடையில் மதியம் இருக்கிறார்.

அதன்பிறகு, சென்னைக்குப்போய் தாமரை அலுவலகத்துக்குச் சென்று, தாமரை மலருக்கான ஆலோசனைகளைச் சொல்லிவிட்டு பூமிதான் கூட்டத்தில் கலந்து கொண்டு
விட்டுத்தான் தாம்பரத்துக்கு வருகிறார்.

அதைப் பற்றிச் சொல்கிறார். அப்பொழுது குமுதா, ‘அம்மாவுக்குக் கடிதம் எழுதி விடலாமே, பயமாக இருக்கிறது’ என்றவுடன், நான்தான் நன்றாக இருக்கிறேனே, நேராக என்னைப் பார்க்கிற நீயே இப்படிப் பயந்து கவலைப்பட்டால் கடிதத்தில் எழுதினால், அவள் எவ்வளவு பயப்படுவாள்? நாம்தான் வெள்ளிக்கிழமை 18 ஆம் தேதிதான் அங்கே சென்று விடுவோமே, அதற்கு மத்தியில் என்ன நடந்துவிடப் போகிறது? என்கிறார்.

நடந்து விட்டதே? 17 ஆம் தேதி அன்று இரவு அவரது உடல்நலம் மீண்டும் கெடுகிறது. மயக்கம் ஏற்படுகிறது. அவருடைய அண்ணன் மகன் மோகன் காந்திராமனுக்குத் தகவல் கொடுத்து வரவழைக்கிறார்கள். அவர் வந்து அழைத்துச் செல்கிறார். எங்கே போக வேண்டும்? என்றபோது, எந்த மருத்துவரிடமாவது கூட்டிச்செல் என்கிறார்.

போய்க்கொண்டு இருக்கும்போதே, எங்கேயப்பா இருக்கிறோம்? என்று கேட்கிறார். ‘கிண்டி வந்தாயிற்று’ என்கின்றனர். அதன்பிறகு மயிலாப்பூர் சென்று பத்மநாபனை அழைத்துக்கொண்டு, பொது மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள். சிகிச்சை தரப்படுகிறது. பிராணவாயு செலுத்தப்படுகிறது. சிறிதுநேரம் நன்கு தூங்குகிறார்.

ஆனால், 18 ஆம் தேதி விடியற்காலை 6 மணிக்கு, அந்த மாமனிதன் உயிர் பிரிந்தது.

ஜீவா என்கின்ற மாமனிதனின் உயிரற்ற சடலத்தைத் தூக்கிச் செல்கிறபோது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அந்த ஊர்வலத்தில் நடந்து வருகிறார். ம.பொ.சி. வருகிறார். டி.கே.சண்முகம் வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருகிறார்கள். இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்படுகிற வேளையில் தான் டி.கே.சண்முகம் அங்கே பாடுகிறார்.

சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஜீவாவின் சரித்திரத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடுகிறார்.

காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே
பசையற்றுப் போனோ மடா
நோய்நொடிகள் வெம்புலிபோல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
என்ற பாடலை டி.கே.சண்முகம் அழுதுகொண்டே பாடுகிறார்.
பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாம் அழுவோம் - தோழனே
வீடுமுச் சூடும் அழும்

என்று டி.கே.சண்முகம் பாடிக்கொண்டே அழுகிறார், அழுதுகொண்டே பாடுகிறார். ஜீவாவின் உடலுக்கு முன்னே திரண்டு இருந்த அனைவரும் அழுதார்கள்.

அன்பிற்குரியவர்களே,

அந்த ஜீவாவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கருத்து வந்தபோது, அப்படி சிலைவைக்கும் பழக்கம் நமது இயக்கத்தில் இல்லை, அது தனிமனித வழிபாடு போன்றது என்று ஒரு கருத்தை ஒருசிலர் சொல்லலாம். கருத்துச் சுதந்திரம் எல்லாக் கட்சியிலும் உண்டு. ஆனால், தோழர் பாலதண்டாயுதம் மறுக்கிறார். ஏன் நீங்கள் பல நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறபோது மார்க்ஸ் சிலையையும், லெனின் சிலையையும் நீங்கள் தூக்கிவரவில்லையா? ஏன் ஜீவாவுக்குச் சிலை வைக்கக்கூடாது? என்று கேட்கிறார்.

அப்படியானால், ஜீவா சிலைக்கு நிதி திரட்ட வேண்டும் என்றபோது, காலில் கிடந்த கொலுசுகளைக் கழற்றித் தருகிறார்கள் மாதர்கள், பொது உடைமை இயக்கச் சகோதரிகள். தங்களுடைய கைகளில் அணிந்து இருக்கின்ற நகைகளைக்கூடத் தருகிறார்கள். சரி பெருந்தொகை வேண்டுமே? மக்கள் திலகம் அள்ளித் தருகின்றவர் எம்.ஜி.ஆரிடத்தில் போகலாம் என்றபோது முதலில் பாலதண்டாயுதம் மறுக்கிறார். தொடக்கத்தில் அவரைப்பற்றி உயர்ந்த அபிப்பிராயம் வைத்து இருக்கவில்லை. அதெல்லாம் சொல்வார், செய்யமாட்டார் என்று கருதினார்.

ஆனால், தோழர் தா.பாண்டியன் அவர்கள், நாம் அவசியம் அணுகுவோம். அதில் என்ன தவறு? என்கிறார். அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் படப்பிடிப்பில் இருக்கிறார். தொடர்பு கொள்கிறார்கள். நாளைக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு வந்து விடுங்கள் என்கிறார்.

ஸ்டூடியோ வாசலிலேயே சைக்கிளில் ஒரு தோழன் தயாராகக் காத்துக் கொண்டு இருக்கிறான். ஐயா நீங்கள் இன்னாரா? என்று கேட்கிறான். பாலதண்டாயுதமும் தா.பாண்டியனும் செல்கிறார்கள். பின்னாலேயே கார்வரட்டும் என்று சைக்கிளில் போகிறான். அவனைப் பார்த்துவிட்டு, எம்.ஜி.ஆர். சூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து ஓடிவருகிறார்.

“பாலன், உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு ரொம்பப் பெருமை” என்று அழைத்து அமரவைத்து, அவரே சிற்றுண்டி எல்லாம் பரிமாறுகிறார். மற்ற பணியாளர்களை எல்லாம் வெளியே போகச் சொல்லிவிட்டு அவரே பரிமாறுகிறார்.

சூட்டிங்குக்குக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்என்ற தகவல் வந்தபோது, கோபப்பட்டு அதட்டுகிறார். ‘நான் யாரிடம் பேசுகிறேன் என்று தெரியும் அல்லவா? நான் வருகிறபோது வருவேன்’ என்கிறார்.

‘ஜீவாவுக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்று இவர்கள் கேட்டவுடன், துள்ளிக்குதித்துக் கட்டி அணைத்துக் கொண்டாராம். “ஒரு மாபெரும் தலைவர். நன்றாகச் செய்யுங்கள் என்று சொன்னதுடன், இவர்கள் கேட்காமலேயே, அந்தச் சிலைக்கு எவ்வளவு செலவு ஆகிறதோ, அதை நானே தருகிறேன்; பீடம் அமைப்பது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாராம். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, 5000 ரூபாய் பணத்தையும் தருகிறார் எம்.ஜி.ஆர்.

இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டும். ஜீவாவின் குடிசையில் தண்ணீர் ஒழுகிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? ஒரு நாள் மழை பெய்கிறது. குடிசைக்குள் முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டது. தண்ணீரை இறைத்து இறைத்து வெளியே ஊற்ற வேண்டும். இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே, இதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா? என்று ஜீவாவிடம் பத்மாவதி அவர்கள் கேட்டதாகவும், ஏன் நின்று கொண்டே இருக்கிறாய்? உட்கார்’ என்று இவர் சொன்னபோது, அந்த அம்மா கோபமாகப் பார்த்தார்களாம்.

ஏன் கோபப்படுகிறாய்? வருத்தப்படுகிறாய்? மலைமாதிரி நான் இருக்கிறேனே? என்றவுடன் பத்மாவதி அம்மையார் சிரித்துவிட்டாராம். ஏன் என்றால் இவர் உடம்பு இப்படி இருக்கிறது அல்லவா. இப்படித் துன்பம் வளைத்தபோதுகூட அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு இயங்கக்கூடிய வழக்கம் அவரிடம் இருந்தது.

ஜீவாவின் அண்ணன்மகன் மோகன் காந்திராமன் சொல்கிறார். ஒருநாள் ஜீவா கூப்பிட்டாராம். “மோகன் இங்கே வா. உன்னிடம் ஒரு சிறிய உதவி கேட்பேன்” என்ற உடன் “கேளுங்கப்பா” என்றாராம். ‘ஒரு 200 நூறு ரூபாய் கொடு. பத்மாவதி சம்பளம் வாங்கியவுடன் எடுத்துக் கொடுக்கிறேன்’ என்றாராம்.

உடனே மோகன் காந்திராமன் அழ ஆரம்பித்து விட்டாராம். என்ன அழவாண்டி? இப்ப நான் என்ன கேட்டு விட்டேன்? எதற்கப்பா அழுகிறாய்? இப்ப நான் கேட்டதில் தவறா? என்று இவர் கொஞ்சம் கோபமாகக் கேட்டாராம். திரும்பவும் மோகன்காந்திராமன் அழுது இருக்கிறார்.

நீங்கள் ஒரு விரல் அசைத்தால் கொண்டு வந்து கொட்டுவதற்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்களே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் என்னிடம் போய் இந்த இருநூறு ரூபாயைக் கேட்டீர்களே என்றாராம்.

இப்படி வாழ்ந்த மனிதர் ஜீவா. அவர் குடிசைவீட்டில் அவதிப்படுவதை அறிந்து வெளியே யாருக்கும் தெரியாமல் அவருடைய துணைவியார் அவருடைய சம்பாத்தியத்தில் அவர் பி.எப்.பை வைத்துக் கடன் வாங்கி அறை கட்டும்பொழுதே இன்னொரு அறையும் சேர்ந்தே கணவனுக்குத் தெரியாமல் கட்டியதாகவும், வெளியில் தெரியாமல் 3000 ரூபாயை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனுப்பி அது ஜீவாவுக்குத் தெரியவே கூடாது என்று அனுப்பி வைத்ததாகவும், இதை அவர் பிள்ளை மணிக்குமார் மூலமாகவே அறிந்துகொண்டு நான் பேசுகிறேன்.

நேர்மையின் இமயமாக வாழ்ந்த ஜீவா அவர்கள் மறைந்தாலும் நம்மிடையே இன்றைக்கும் வாழ்கிறார்.

நான் சொன்னேன் அல்லவா? அவர் இலக்கியத்தில் வாழ்கிறார், சேவையில் வாழ்கிறார் என்று. இப்பொழுது இந்த நேரத்தில் மழைபொழியவில்லை. இயற்கை ஒத்துழைத்து இருக்கிறது பூதப்பாண்டியில். ஜீவாவைப்பற்றிப் பேசுவதற்கு அடியேன் வந்து இருக்கிறேன். இந்த ஊர் மக்களிடம் பேசுவதற்கு ஒரு மாமனிதனின், மேருமலையென இமயமலையென உயர்ந்து வாழ்ந்த ஒரு உத்தமனின் சத்தியவந்தனின் பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு வந்து இருக்கிறேன்.

ஆனால், தோழர்களே அன்புத் தாய்மார்களே, மழை பெய்தால் சகோதரிகளே சற்றுநேரம் நீங்கள் நனையலாம். நான் பேசும்போது மழை வந்தால் எவ்வளவு நேரமானாலும் நனைந்துகொண்டுதான் பேச வேண்டும். அதை மகிழ்ச்சியோடு செய்வேன். ஆனால், சின்னக் குழந்தைகளுக்கு ஜலதோசம் பிடித்துவிடக்கூடாதே? மழையில் நனைந்தால் ஏதாவது நோய்நொடி வந்துவிடக் கூடாதே? அதுவும் எப்படிப்பட்ட நோய்கள் எல்லாம் தாக்குகிறது என்று மக்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிற நேரத்தில், பலவிதமான அவதாரங்களோடு நோய்கள் படைஎடுத்து வருகிற நேரத்தில், நமது பிள்ளையைக் கூப்பிட்டுக் கொண்டு வீட்டுக்கு ஓடிவிடுவோம் அல்லவா?

மாலை ஆறு மணிக்கெல்லாம் நீங்கள் வந்து விட்டீர்கள். ஜீவா விழா அல்லவா? கலை நிகழ்ச்சிகள் வேறு அருமையாக நடத்தினார்கள். பலர் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். வீட்டுக்குப்போன உடன் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கும். இதற்குப்பின்னரும் நாடகம் இருக்கிறது. அப்படி அதிக நேரமாகி வீட்டுக்குப் போனாலும் மாவு இருக்கும். காலை இட்லிக்குத் தயாராகின்ற மாவு இருந்தால், அதை இப்பொழுதே தோசை போட்டுச் சாப்பிட்டு விடலாம்.

வசதி இல்லாத வீடாக இருந்தாலும், பழைய சோற்றை எடுத்து, அதில் தயிரையோ மோரையோ ஊற்றி, மிளகாயோ வெங்காயமோ இருந்தால் கடித்துச் சாப்பிட்டு விடலாம். இந்தக் குழந்தைகளை மழையில் நனைய விடாமல் வீடுகளில் பார்த்துக் கொள்ளலாம்.

எனது அருமைத் தாய்மார்களே! இதோ, கடலுக்கு அப்பால், ஓலமிடும் கடலுக்கு அப்பால், மூன்று இலட்சம் தமிழர்கள் - பெண்கள், குழந்தைகள், மழையில் - வெள்ளத்தில் நடுங்கி நரக வேதனையில் இருக்கிறார்களே, அவர்கள் எங்கே செல்வது?

அப்படிப்பட்ட கொடுமையான துயரத்துக்கு ஆளாகி இருக்கின்ற மக்கள் எங்கே செல்லமுடியும்? பச்சிளம் குழந்தைகள் பால் இன்றி அழும் என்றாரே ஜீவா, ஜீவா இப்பொழுது நீங்கள் உயிரோடு இருப்பீர்களானால் நீங்கள் என்ன பாடி இருப்பீர்கள், எங்கள் ஈழத்துப் பிள்ளைகளைப் பற்றி?

பாலின்றிப் பிள்ளை அழும், பட்டினியால் தாய் அழுவாள் என்றீர்களே, அங்கே மரணத்தின் மடியில் எத்தனை பிள்ளைகள் சாகிறார்கள்? பசியால் சாகிறார்கள். நோயால் சாகிறார்கள். நரக வேதனையில் உழலுகிறார்கள். வீடு இல்லை, வாசல் இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தங்கள் பூர்வீக மண்ணைவிட்டு விரட்டப் பட்டு, சிங்களக் கொடியோரால் தாக்கப் பட்டு, கொலைக்களத்தில் மடிந்து, இன்றைக்கு மூன்று இலட்சம் மக்கள் வதைபடுகிறார்களே, நோய்கள் தாக்கு கிறதே, பசி தாக்குகிறதே. கண்ணீரிலும் இரத்தத்திலும் துடிக்கிறார்களே, சின்னஞ்சிறு இளம் பெண்களைக் கற்பழித்து நாசமாக்குகிறானே, கற்பை உயிரினும் மேலாகப் போற்றுகிற அந்த பெண்பிள்ளைகள் நாசமாக்கப் படுகிறார்களே, இளைஞர்களை இவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் மீண்டும் புலிகளாகி விடக்கூடாது என்று காட்டுக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொல்லு கிறார்களே, இவ்வளவு கொடுமைகளும் வேறு எங்கே நடக்கிறது என்று சொல்லுங்கள். இந்த உலகத்தின் மனசாட்சி செத்துவிட்டதா?

நான் பேசிக் கொண்டு இருக்கும் இதேநேரத்தில், மூன்று இலட்சம் மக்கள்படுகின்ற அவதியை கண நேரம் உங்கள் மனக்கண்முன்னால் கொண்டு வந்து பாருங்கள். நாதியற்றுப் போய் விட்டதா நானிலத்தில் தமிழ் இனம்? பாராண்ட இனம், பார் போற்ற வாழ்ந்த இனம். உலகத்திற்கு கலையை கலாச்சாரத்தை, நாகரிகத்தைப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்த இனம்.
உலகத்தில் தோன்றிய முதல் மொழிக்குச் சொந்தக்காரனா இவன். கடல் கடந்த நாடுகளுக்கு வணிகம் நடத்திய இனம். படை எடுத்துச் சென்ற இனம். இன்றைக்கு நாயினும் கேவலமாக, சிங்களவன் காலடியில் கொல்லப்பட்டு, அவர்கள் மண்ணில் உரிமையோடு வாழமுடியாமல் அடிமைகளாக்கப்பட்டு விட்டார்கள்.

நாட்டரசன்கோட்டையில் கம்பன் விழாவில் பேசினார் ஜீவா. செஞ்சோற்றுக் கடனாற்றிய கும்பகர்ணன் என்று பேசினார். பாஸ்கரத் தொண்டைமான் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னார். நீங்கள் இலக்கியப் பணியாற்ற வாருங்கள் ஜீவா என்றார். அந்தக் கூட்டத்தில் அந்தப் பேச்சைக்கேட்டவர்கள், கும்பகர்ணனே வந்து ஜீவாவைக் கட்டிப்பிடித்து வாழ்த்துவான் என்று சொன்னார்கள்.

கும்பகர்ணனைப் பற்றிப் பேசினார்.

ஒரு அண்ணனுக்காக உயிர் விட்டவனை செஞ்சோற்றுக் கடன் ஆற்றினான் என்று நாட்டரசன் கோட்டையில் ஜீவா எழுப்பிய முழக்கம், அங்கே இருந்தவர்களது இதயங்களை வருடியது.
அப்படிப்பட்ட ஜீவா, வாழ்நாள் முழுவதும் இலக்கியத்துக்கு தொண்டு ஆற்றி, தமிழுக்குத் தொண்டு ஆற்றி, தமிழ் இனத்துக்குத் தொண்டு ஆற்றி, ஒரு மாசு மருவற்ற பத்தரை மாற்றுத் தங்கமாக ஜொலித்த அந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டும்.

வயது 56 தானே? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டுமே? மறைந்து விட்டாரே? மறைந்தாலும், நம் மனங்களில் வாழ்கிறார். ஜீவா மறைந்தபின் அண்ணா முதல்வரான பின்னர் ஜீவாவின் மூத்த மகளுக்கு பெரியார் வீட்டில் திருமணம் அண்ணா வாழ்த்துகிறார். அப்போது அறிவிக்கிறார். “ஜீவாவின் ஆசையை நிறைவேற்று வேன் என்றார். சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கிக் கொடுக்கிறேன். இதுதான் இந்த மணமக்களுக்கு நான் தரும் பரிசு. இனி தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குச் சட்ட பூர்வமான குடும்ப அந்தஸ்து உண்டு. இதைச் சட்டமாக தமிழகச் சட்டமன்றத் திலே நிறைவேற்றுவேன் - இந்த உறுதியை மணமக்களுக்குப் பரிசாகத் தருகிறேன் என்றார் அறிஞர் அண்ணா.

ஜீவாவுக்கு இப்படிப்பட்ட புகழ்க் கிரீடம் அண்ணா அவர்களால்தான் சூட்ட இயலும்.

பூதப்பாண்டி என்கின்ற பெருமைமிகு பழந்தமிழர் ஊரிலே பிறந்த மாமனிதன் ஜீவா புகழ் வாழ்க!

அந்த ஜீவா எந்த உணர்வுகளுக்காக வாழ்ந்தாரோ, அந்த உணர்வுகளின் அடிப்படையிலே தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் தொண்டு செய்யச் சூளுரைப்போம்!
ஜீவாவின் புகழ் மீது ஆணையிட்டுச் சூளுரைப்போம்!

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)