எங்கள் இதயக் குமுறலைக் கேளுங்கள்; நீதி வழங்குங்கள் ஜெனீவாவில் வைகோ உரை

Issues: Human Rights, International, Srilanka

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Wed, 27/09/2017

 

 

 

 

 


எங்கள் இதயக் குமுறலைக் கேளுங்கள்;

நீதி வழங்குங்கள்

 

ஜெனீவாவில் வைகோ உரை

 

ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் 26.9.2017 அன்று, வைகோ அவர்கள் நான்கு முறை உரை ஆற்றினார். இன்றும் அவரிடம் சிங்களவர்கள் பிரச்சினை செய்யக்கூடும் என்பதால், புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர் அமைப்புகள், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிர்வாகத்திடம் முன்னைய நாள் சம்பவம் குறித்துப் புகார் கொடுத்ததனால், கவுன்சில் பாதுகாப்புத் துறையினர் வைகோ அவர்களுக்குப் பாதுகாப்பு மேற்கொண்டனர்.

பிற்பகலில் வைகோ ஆற்றிய இரண்டு உரைகள் பின்வருமாறு:

முதல் உரை:

2001 செப்டெம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், இனவெறி, இன வேற்றுமைக் கொடுமைகளை எதிர்த்து நடைபெற்ற அனைத்துலக மாநாடு (World Conference against racism, racial discrimination, xenophobia and related intolerence declared in Durban) மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்றது. அம்மாநாட்டில், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள், துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பிரகடனத்தில் சொல்லப்பட்டன.

ஆனால், இலங்கைத் தீவில் 2006 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியன்று, போரில் உயிர் நீத்த  குடும்பங்களின் பிள்ளைகளான சிறுமிகளின் மறுவாழ்வு இல்லம் அமைந்து இருந்த செஞ்சோலையில், இலங்கை இராணுவத்தின் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில், மிகக் கொடூரமாக 61 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்; 170 பெண் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

எட்டு வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் மார்பில் ஐந்து குண்டுகள் பாய்ந்து துடிதுடிக்கக் கொல்லப்பட்டார். அவன் செய்த பாவம் என்ன? பிரபாகரனின் மகனாகப் பிறந்ததுதான்.

பத்திரிகையாளர் தராக்கி சிவராம், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி, இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவினரால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மனித உரிமைக் கவுன்சிலின் அன்றைய தலைவரான லூயிஸ் ஆர்பர் அம்மையார், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்வையிடுவதற்குக் கூட இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

தமிழர்களின் சார்பில், மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளை மிகுந்த பணிவோடு பிரார்த்தனை செய்து கேட்கிறேன்: தமிழர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, எங்கள் கண்ணீரைத் துடையுங்கள். அதன் மூலம், ஈழத்தமிழர்களுக்குப் புதிய விடியல் உதயமாகட்டும்.


இரண்டாவது உரை:

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதியன்று, மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனத்தின்படி, உலகில் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளும், குறிப்பாக சுய நிர்ணய உரிமையும் உண்டு என்பதாகும்.

1995 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து இலட்சம் தமிழர்கள், இராணுவத் தாக்குதலால் வெளியேற்றப்பட்டு, திக்குத் தெரியாமல் திண்டாடி, காடுகளுக்குள் செல்ல நேர்ந்தது.

அப்போது போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் அவர்களும், அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் புத்ரோஸ் புத்ரோஸ் காலி அவர்களும், கொடுந்துயரத்திற்கு ஆளாகி விட்ட ஈழத்தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து, ஆதரவு தர வேண்டுகோள் விடுத்தனர்.

மனித உரிமைகளுக்கான சர்வதேச மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிப்பது என்னவென்றால், சுய நிர்ணய உரிமையை மறுப்பதே மனித உரிமை மீறல் ஆகும் என்பதுதான். அத்துடன், திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்று, மனித உரிமைகள் மொத்தமாக நசுக்கப்பட்டு, யுத்த காலத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் பெருங்கூட்டமாக அகதிகள் ஆவதும், காணாமல் போவது குறித்தும் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது.

அனைத்துலக மாநாடு எவற்றிற்கெல்லாம் கண்டனம் தெரிவித்ததோ, அவை அனைத்தும்  இலங்கைத் தீவில், சிங்கள இராணுவத்தால் நடத்தப்பட்டது. தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த உண்மைச் சம்பவங்களை, லண்டன் சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஒளிப்பதிவுகள் நிரூபித்து விட்டன.

நாங்கள் கேட்பதெல்லாம், ஈழத்தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ.நா.மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான்.

இலங்கையில் தமிழர் தாயகம் நாஜிகள் நடத்திய சித்திரவதைக் கூடம் போல ஆகி விட்டது. எங்கள் இதயக் குமுறலை, வேதனைப் புலம்பலை, பொங்கி வரும் கண்ணீரை மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பாருங்கள்; எங்களுக்கு நீதி வழங்குங்கள்.

 

வெல்லட்டும் திலீபனின் தியாகம்.

 

தாயகம்                                                              தலைமைக் கழகம்
சென்னை - 8                                                     மறுமலர்ச்சி தி.மு.க.,
27.09.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)